எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் சூறைக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில், வாசுதேவநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து, இதமான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த டிசம்பர் முதல் கடும் குளிர் மற்றும் தற்போது கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்தும் செடிகள் கருகி வறட்சி ஏற்பட்டது. இந்தநிலையில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மாதங்களுக்கு பிறகு கனமழை பெய்தது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய மழையால் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை காண முடியாமல் அரங்குகள் மற்றும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் சுற்றுலாப் பயணிகள் ஒதுங்கினர். ஒரு சில சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு பூங்காவை கண்டு களித்தனர். உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக கன மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
கோவையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் அதிக அளவில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கோவையில் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம், ஜி.என் மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கின. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். கோவை மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் தேங்காமல் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை விமான நிலையம், அவனியாபுரம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், வில்லாபுரம், வலையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.