எழுத்தின் அளவு: அ+ அ- அ
செங்கல்பட்டு மாவட்டம் மணல்மேடு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால், 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம், பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் நீருடன் கழிவு நீர் கலந்து அப்பகுதிகளில் தேங்கியிருந்தது. இந்நிலையில், மணல்மேடு பகுதிக்கு உட்பட்ட முத்தாலம்மன் கோவில் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து குழாய்களில் வந்ததாக கூறப்படுகிறது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருவேதி, மோகன ரங்கன் உள்ளிட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
குடிநீருடன் கழிவு கலந்து விவகாரத்தில், புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.