கள்ளக்குறிச்சி சம்பவம் போல் வருங்காலத்தில் இனி நடைபெறாமல் தடுத்திடுக - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக அரசின் அலட்சிய போக்கினால் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து, உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.  உயிரிழந்தோர் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் முதலமைச்சர் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.
 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை, போதைப் பொருள் விநியோகம் ஆகியன தங்கு தடையின்றி நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். ஆளும் கட்சியான திமுக உதவியோடு இத்தகைய சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் பலர் சேலம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி,விழுப்புரம் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மேலும் பலரின் உடல் நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கள்ளச்சாராய மரண சம்பவத்தால் அப்பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நிகழ்ந்த நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எல்லா இடங்களிலும் கள்ளச்சராயம் பெருக்கெடுத்து ஓடுவதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.  

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவ பகுதியை நேரில் பார்வையிட, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அங்கு சென்றார்.  சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து, காலையில் புறப்பட்ட புரட்சித்தாய் சின்னம்மா பிற்பகலில் கள்ளக்குறிச்சி சென்றார். 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற புரட்சித்தாய் சின்னம்மா அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும்  சிகிச்சை குறித்த விவரங்களை  மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பழங்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். 

உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவரின் மனைவி, புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தழுதழுத்த குரலில்,  "ரெண்டாவது அம்மாவா இருக்கீங்க, இந்த சாரயத்த ஒழிக்கிறதுக்கு நடவடிக்கை எடுங்கம்மா" என்று  கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புரட்சித்தாய் சின்னம்மா,  இந்த சோக நிகழ்வுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் சமூக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் வேறெங்கும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் முதலமைச்சர் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார். 


Night
Day