பீகாரில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் முதல்கட்ட வாக்குப் பதிவில் நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஆகியோர் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

பீகாரில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. பங்கிபூர் தொகுதி பாஜக வேட்பளாரும் அமைச்சருமான நிதின் நபின், தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், பீகாரின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட வேண்டும், நல்லாட்சியுடன் கூடிய நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசு அமைய வேண்டும் என்று கூறினார்.

பீகார் துணை முதலமைச்சரும், லக்கிசராய் தொகுதி வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா தனது தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் பேட்டியளித்த அவர், ஜனநாயகத்தின் மகத்தான திருவிழாவில் தாம் பங்கேற்றதாக கூறினார். அதிகார துஷ்பிரயோகம், அராஜகம் மற்றும் காட்டாட்சியை கொண்டுவர நினைப்பவர்களிடம் இருந்து பீகார் விடுபடும் என்றும் விஜய் குமார் சின்ஹா தெரிவித்தார்.

ஆர்ஜேடி தலைவரும் எதிர்க் கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தனது குடும்பத்தினருடன் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். தனது  மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ் மற்றும் பெற்றோரும் முன்னாள் முதலமைச்சர்களுமான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோருடன் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமை ஆற்றினார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், நவம்பர் 14ம் தேதி புதிய பீகார் உருவாகும், புதிய அரசு அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Night
Day