பிரதமர் மோடியின் விரதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜ வசதியில் வாழும் பிரதமர் மோடி, கடந்த சில நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரையில் படுத்துறங்குகிறார். உணவுக்கு பழங்கள் மற்றும் இளநீர் மட்டுமே எடுத்து கொள்ளும் பிரதமரின் கடும் விரதத்திற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லம்தான் பிரதமர் நரேந்திர மோடி  வசிக்குமிடம். நாட்டின் பிரதமர்களுக்கு அரசால் வழங்கப்படும் இந்த இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். பிரதமரின் வீடு, அவர் வளர்க்கும் கால்நடை, தியானம் செய்யும் அறை, உடற்பயிற்சி மேற்கொள்ளும் இடம் தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நாம் பார்த்திருக்க முடியும்.

அதே நேரத்தில் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் படைத்த பிரதமர் பயணம் செய்ய அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய சொகுசு கார்கள், தனி விமானம் என பல வசதிகள் அரசு தரப்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களாக தரையில் படுத்து உறங்குவதாகவும், உணவாக பழங்கள் மற்றும் இளநீர் மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. திடீரென பிரதமரின் செயல்பாடுகள் மாற்றம் அடைந்ததற்கு காரணம் ஆச்சர்யப்பட வைக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலகலமாக நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 5 வயதுடைய குழந்தை ராமர் சிலையை கர்ப்ப கிரகத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 12 ஆம் தேதி முதல் 11 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டு வருகிறார் எனக் கூறப்படுகிறது. தோல் பொருள்கள் பயன்படுத்தாத விரிப்புகளை மட்டும் பயன்படுத்தும் பிரதமர், தற்போது தரையில் படுத்து உறங்குவதாகவும், உணவாக பழங்கள் மற்றும் இளநீர் மட்டுமே உட்கொள்வதாகவும் கூறப்படுகிறது. 

அயோத்தி கும்பாபிஷேக விழாவிற்காக விரதமிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பிரம்ம முகூர்த்த வேலைகளில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து யோகா மற்றும் தியானம் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதாகவும், உணவாக பழங்களும் ஆகாரமாக இளநீர் மட்டும் உட்கொள்வதாகவும் கூறப்படுகிறது. 

ஒருபுறம் கடும் விரதம் மற்றொருபுறம் முக்கியமான வைணவ திருத்தலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்துள்ளார். குறிப்பாக குருவாயூர் கிருஷ்ணர் கோவில், திருப்பரையாறு ஸ்ரீராம சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடத்தினார். 

மேலும், மகாராஷ்டிரா கோதாவரி நதிகரையில் உள்ள ராம் குந்தா கோவில், பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோயில், ஆந்திர மாநிலத்தில் உள்ள வீரபத்திரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். 

வேதங்களை அதிகம் நம்பும் பிரதமர் நரேந்திர மோடி  ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் முதல் தீபாராதனை செய்யவுள்ளார். கும்பாபிஷேகத்தில் கலச அல்லது மூல விஹ்ரகத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து முதல் தீபாராதனை காட்டுபவர் கடும் விரதங்களை கடைபிடிக்க வேண்டும் என வேத நூல்கள் சொல்வதாகவும், அதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி கடும் விரதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

வேதங்களின் படி "யம நியமம்" மேற்கொள்ளவேண்டும் என கூறுவார்கள்.
அப்படியென்றால் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் என்பது பொருள்படும் என கூறப்படுகிறது. மனிதன் தனது ஆசைகளை கட்டுப்படுத்தி ஒழுக்கங்களோடு கடும் விரதம் புரிந்து தீப ஆராதனை காட்ட வேண்டும் என்பதை வேத நூல்கள் சொல்வதாக கூறப்படுகிறது. அதன்படியே பிரதமர் மோடி கடும் விரதம் இருந்துள்ளார்.




Night
Day