எழுத்தின் அளவு: அ+ அ- அ
விசைத்தறியாளர்கள் தொடர்ந்து 14வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம், ஆண்டுக்கு 6 சதவீத மின்கட்டண உயர்வை ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 14வது நாளாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 400 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் தலைவர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் 100 கோடி ரூபாய் மதிப்பில் நூல்கள் தேக்கமடைந்து உள்ளதால் வேலை நிறுத்தத்திற்கு தீர்வு காணவேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். இதனிடையே சோமனூரை தலைமையிடமாக கொண்ட விசைத்தறியாளர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக அறிவித்துள்ளனர்.