பிரதமர் குறித்து அவதூறு பேச்சு - அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி குறித்து தரக்குறைவான வகையில் பேசிய புகாரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறான பேச்சு, அநாகரிகமான பேச்சு என அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் கடந்த 22ஆம் தேதி  திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

சேலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காமராஜரை பற்றி புகழ்ந்து பேசியதை குறிப்பிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், காமராஜருக்கும் மோடிக்கும் என்ன சம்மந்தம் என்று கேள்வி எழுப்பியதுடன்,  டெல்லியில் காமராஜர் இருந்த போது அவரை உயிரோடு கொளுத்தி கொல்ல நினைத்த பாவிகள்தானே என்றும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். 

அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , பிரதமர் மோடிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளையும் மன்னிக்க முடியாத வகையிலும் பேசி திமுக தலைவர்கள் தங்களின் நேர்மையற்ற நடத்தையில் புதிய தாழ்வு நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மேடையில் இருந்த திமுக எம்.பி. கனிமொழி கூட அமைச்சரின் பேச்சை தடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசியது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் கடிதம் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனிதா ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் எனவும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தின் அடிக்கல் நாட்டு விழா தொடர்பான போஸ்டரில் சீன கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம் பெற்ற சம்பவத்தில் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஏதோ சிறிய தவறு நடந்து விட்டது என சர்வ சாதாரணமாய் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

அவதூறாக பேசுவது, அநாகரீகமாக பேசுவது என அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது பிரதமர் குறித்தே அருவருக்கத்தக்க வகையில் பேசி வழக்கிலும் சிக்கி, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டுள்ளார்.




Night
Day