தீபாவளி பண்டிகை : களைகட்டிய ஆட்டுச்சந்தை - ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டியது. ஆடுகள் அதிக விலைக்கு விலை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு ஏராளமான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தன. அதிகாலை 2 மணி முதல் நடைபெற்ற ஆட்டு சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 18 ஆயிரம்  முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதுப்போல், செம்மறி ஆடுகள் ஜோடி 25 ஆயிரம் ரூபாய் முதல்  45 ஆயிரம் ரூபாய் வரையும், குறும்பாடுகள் ஜோடி 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கோடி வரை ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 4 கோடி அளவிற்கு கூடுதலாக ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. அதேசமயம் செஞ்சி வார ஆட்டு சந்தை நடைபெறும் இடம் முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்பு விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூரில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளின் எடையை பொறுத்து 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் வழக்கத்தைவிட ஆடுகள் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. கொளத்தூர் சந்தையில் இன்று ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஆட்டு சந்தைக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்தணி, வேலூர், திருவண்ணாமலை, ஆந்திரா, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், பிற்பகல் 12 மணி வரை நடைபெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் 5 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆட்டுச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று காலை முதலே ஆட்டுச் சந்தைக்கு தேனி, ஒட்டன்சத்திரம், மணப்பாறை, திருச்சி, மதுரை, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில்,  சுமார் 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.  அதேபோல், 20 கிலோ எடை கொண்ட ஆடுகள் 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செம்பட்டி ஆட்டு சந்தையில் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற தீபாவளி வாரசந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளுக்கு 500 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெறும் ஆட்டுச் சந்தையில் 2 கோடி முதல் 3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற ஆட்டுச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் 6 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர். இந்த ஆட்டு சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து போதுமான இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்துக்கு ஆட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, உள்ளிட்ட ரகங்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.  சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர். 5 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 


Night
Day