தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன், கீழப்பூங்குடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி வாக்காளர்கள் தொடர்ந்து ஆதரவளித்தார்கள், ஆனால் தொகுதிக்கு எந்த ஒரு திட்டங்களையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். 

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் புதுச்சேரி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். லாஸ்பேட்டை பகுதியில் நடந்த பிரசாரத்தின்போது, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பட்டாதாரி இளைஞர்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு ஆதரவாக ஈரோடு மாவட்டம் பவானியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், போதைப்பொருள் தமிழக மக்களை கெடுத்து வருவதாகவும், அதனால் தமிழ்நாட்டுக்கு திமுகவும் வேண்டாம், ஸ்டாலினும் வேண்டாம் என்று தெரிவித்தார். 

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்  மணக்குடி கிராமத்தில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய அவர், குமரி மாவட்டம் ஜாதி, மதம், இனம், மொழி பாகுபாடுகளை கடந்து ஓங்கி உயர்ந்து வளர்ச்சியில் முதலிடம் பெற வேண்டும் என்றார். 

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அடையாறு காந்தி மண்டபம் அருகே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கல்வியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்ததற்கு காமராஜரே காரணம் என்றும், ஆனால் கிண்டியில் உள்ள காமராஜர், காந்தி நினைவிடங்கள் பராமரிப்பின்றி குப்பைகளாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ஜிகே வாசன், சென்னிமலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மக்களின் எண்ணங்களுக்கு மாறாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு சுமையை ஏற்றியுள்ளதாக குற்றம் சாட்டினார். 

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அஷ்வத்தாமனை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கலசப்பாக்கம் பகுதியில் விவசாயிகளுடன் சேர்ந்து நிலத்தில் இறங்கி பாட்டுப்பாடி, நாற்று பறித்து நடிகர் கூல் சுரேஷ் வாக்கு சேகரித்தார்.

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் விவசாயி செந்தில்குமாருக்கு ஆதரவாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்  பி.ஆர். பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக அரசு காவிரி பிரச்சனையில் மெத்தன போக்குடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜனை ஆதரித்து  தும்பளம்பட்டி கிராமத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய அவர்,  மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் ஸ்டிக்கர் ஓட்டி தாங்கள் கொண்டு வந்த திட்டம் போல் காட்டி திமுகவினர் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.

Night
Day