செய்தியாளர் சந்திப்பில் நிருபர்களிடம் ஆவேசமாகப் பேசிய காங்கிரஸ் எம்.பி.

எழுத்தின் அளவு: அ+ அ-

செய்தியாளர் சந்திப்பின் போது, நிருபர்கள் எழுப்பிய கேள்விகளால் ஆவேசம் அடைந்த காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், அனைவரிடமும் சீறினார். சீமான் போல் கெட்ட வார்த்தை பேசுவேன், செருப்பால் அடிப்பேன், என தனது திருவாய் மலர்ந்து திருநாவுக்கரசர் அளித்த பேட்டி குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

பாஜகவைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மங்களகரமாகத் தான் பேட்டியைத் தொடங்கினார். ஆரம்பத்தில், திருநாவுக்கரசர் பேசிய பேச்சால், அந்த இடம் கலகலப்பாக இருந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல சீரியஸ் மோடுக்குச் சென்று விட்டது. எங்கள் தொகுதி எம்.பி.யைக் காணவில்லை என திருச்சி மக்கள் போஸ்டர் ஒட்டி இருப்பதாக கேள்வி எழுப்பியதால் கோபம் அடைந்த திருநாவுக்கரசர், என்னை இதுவரை இங்கு பார்க்கவில்லையா? என ஆத்திரத்துடன் பதில் அளித்ததுடன் கேள்வி கேட்ட நிருபரை ஒருமையில் வறுத்தெடுத்தார்.

கேட்பதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என பதில் அளித்த அவர், சீமான் போல் கெட்ட வார்த்தையில் தான் இனி பேசுவேன் என முகம் சுளிக்கும் வகையில் பேசினார்.

தொடர்ந்து, தாங்கள் பாஜகவுக்கு செல்லப் போவதாக தகவல் வந்துள்ளதே என கேள்வி கேட்ட போது, இதைச் சொன்னவரை செருப்பால் அடிப்பேன் என அடாவடியாகக் கூறினார் திருநாவுக்கரசர்.

இதுபோல் கேள்வி கேட்டால் சீமான் போல் கெட்ட வார்த்தையில் தான் பேசுவேன் என மீண்டும் கூறிய திருநாவுக்கரசர், இதேபோல் மு.க.ஸ்டாலினிடம் சென்று கேள்வி கேட்டால், சுற்றி இருப்பவர்கள் மொத்தி விடுவார்கள் என ஆணவத்துடன் கூறினார் திருநாவுக்கரசர்.

யூடியூப் சேனல்களுக்கு தாம் மட்டுமே பேட்டி கொடுப்பதாகக் கூறிய திருநாவுக்கரசர், ஏதோ தொலைந்து போகட்டும் என நினைத்துக் கொண்டுதான் பேட்டி தருவதாகவும் தெரிவித்தார். 

ஆக மொத்தத்தில், கேள்விக்குப் பதில் தெரியா விட்டால், நிருபர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தி டிராமா செய்யும் அரசியல் தலைவர்களின் லிஸ்டில் தற்போது புதுவரவாக இணைந்துள்ளார் திருநாவுக்கரசர். 

Night
Day