சென்னை மாநகர பேருந்தின் அவலம்! கதறும் பயணிகள்... 07-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அமைந்தகரை அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் பலகை உடைந்து கீழே விழுந்ததில் பெண் பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்... பழைய இரும்புக்கு பேரிச்சம்பழம் என்ற கதையாக சென்னையில் வலம் வரும் மாநகர பேருந்து பல்லிளித்த கதை பற்றி சற்று விரிவாக காணலாம்...

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தடம் எண்-59, ஒயிட் போர்டு பேருந்து சென்று கொண்டிருந்தது...

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அண்ணா நகர் ஆர்ச் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, பின் இருக்கை பகுதியில் இருந்த பலகை திடீரென உடைந்து கீழே விழுந்தது. அப்போது பலகையின் மேலே நின்றிகொண்டிருந்த பெண் பயணி ஓட்டைக்குள் விழுந்து அலற ஆரம்பித்தார்...

கால்கள் இரண்டும் ஓட்டைக்குள் சென்ற நிலையில், இடுப்பு பகுதி நுழைவதற்குள் இரு கைகளால் பேருந்தை பிடித்து தொங்கிக்கொண்டே அலற ஆரம்பித்தார் பெண் பயணி.... சக பயணிகளும் அலற ஆரம்பிக்க பேருந்தின் ஓட்டுநர் ஒரு வழியாக பேருந்தை நிறுத்தினார்...

உடனடியாக பெண் பயணியை காப்பாற்றி மேலே தூக்கிய சக பயணிகள், பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர்...

மாநகர பேருந்தின் அவலட்சணத்தை பயணிகள் வீடியோ எடுக்க முயல, ஓட்டுநரும், நடத்துனரும் பயணிகளை மிரட்ட ஆரம்பித்தனர்...

அதையும் மீறி ஒரு சில பயணிகள், மாநகர பேருந்தின் அவலட்சணத்தை சமூக வலைதளங்களில் பறக்க விட்டனர்... 

பேருந்தை எடுக்கும் போது, ஆய்வு செய்ய மாட்டீர்களா என பயணி ஒருவர் நடத்துநரிடம் கேள்வி எழுப்ப, கடைசியில் இருக்கும் பலகையை நான் எப்படி பார்க்கமுடியும் என ஏளனமாக பொறுப்பில்லாமல் பதிலளித்தார் அந்த நடத்துநர்...

கடந்த சில தினங்களுக்கு முன் அரசு பேருந்தின் கியர் ராடு கழண்டு கொல்ல, பயணி ஒருவர் கியர் ராடை பிடித்துக்கொண்டே சென்ற அவலமும் அரங்கேறியது....

மொத்தத்தில் சென்னை மாநகரில் ஓடும் ஒயிட் போர்டு பேருந்துகள் அனைத்தும் காயலாங்கடையில் போடும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் புதிய பேருந்துகளை ஒயிட் போர்டு பேருந்துகளாக இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்...

Night
Day