அண்ணாநகர் - பழைய பேப்பர் சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணாநகர் பகுதியில் பழைய பேப்பர் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அந்த பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சத்திற்கு ஆளாகினர்

அண்ணாநகர் ஈஸ்ட், 1வது அவென்யூவில் பழைய பேப்பர்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் நேற்றிரவு திடீரென தீப்பற்றியதில் மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

அதனைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்களும், போலீசாரும் கொழுந்துவிட்டு எரியும் பேப்பர் குடோனில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்ததால், குடியிருப்புவாசிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பேப்பர் குடோனில் கொழுந்துவிட்டு எரிந்த தீ பலமணி நேர போராட்டத்திற்கு பிறகே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் கரும்புகையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பேப்பர் குடோனுக்கு அருகில் ஐயப்ப பக்தர்கள் பூஜை செய்தபோது பட்டாசு வெடித்ததால், விழுந்த தீப்பொறியால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day