ஒத்த பிஸ்கட்! எவ்வளவு அக்கப்போரு!!! அப்செட்டான ராகுல்காந்தி 07-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே ஒரு நாய் பிஸ்கட்...அதுக்கு இவ்வளவு பெரிய அக்கபோரா? ச்சே! என ஒரே வார்த்தையில் பாஜகவினரின் கிண்டல் கேலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்காந்தி!! என்ன நடந்தது என்பது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்....

ஜனவரி 14ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தொடங்கி நாகலாந்து, அசாம், அருணாச்சல் பிரதேஷ், மேகாலயா, மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி....

மக்களிடம் ராகுல் காந்திக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்த போதிலும், அவரது ஒவ்வொரு அசைவையும் அரசியலாக்கி வருகிறது பா.ஜ.க...

மணிப்பூரில் நடைபயண பாதை மாற்றம், அசாமில் தாக்குதல் வழக்குப்பதிவு என பா.ஜ.க. அதிரடி காட்ட, பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி...

பீகார் மேற்குவங்க எல்லையில் ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது என பல்வேறு இடியாப்ப சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன...

ஆனாலும் மனம் தளராத ராகுல் காந்தி, துளியளவும் சோர்வு இல்லாமல் இரண்டாம் கட்ட நடை பயணத்தை நிறைவு செய்ய தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபயணத்தின் போது, ராகுல் காந்தியை வளர்ப்பு நாயுடன் நபர் ஒருவர் சந்தித்தார்...

ராகுல் காந்தியும் தனது வாகனத்தின் மீது நாய்க்குட்டியை அமர வைத்து பிஸ்கட் கொடுக்க, கூட்டத்தினரின் கரகோஷத்தால் மிரண்ட வளர்ப்பு நாய் பிஸ்கட்டை சாப்பிடாமல் பேந்த பேந்த விழித்துள்ளது...

இதையடுத்து நாயின் முதலாளியிடம் ராகுல் காந்தி பிஸ்கட்டை வழங்க அதை வீடியோ எடுத்து மீண்டும் அரசியல் சர்ச்சையை கிளப்பியது பா.ஜ.க...

நாய்க்குட்டி சாப்பிட மறுத்த பிஸ்கட்டை தொண்டர்களுக்கு வழங்கினார் ராகுல் காந்தி என சர்ச்சையை கிளப்பி பா.ஜ.க.வினர் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்...

அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வ ஷர்மா, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அமித் மாள்வியா என பலரும் ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்து, பட்டத்து இளவரசர் தொண்டர்களை நாய்க்குட்டிகளுக்கு இணையாக நடத்துகிறார் என கருத்து தெரிவித்தனர். 

இது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பாரதிய ஜனதா கட்சிக்கு நாய்கள் மேல் என்ன மோகம் என கேள்வி எழுப்பினார்...

நாய்க்குட்டிக்கு பிஸ்கட்டை உணவாக அளிக்க முயற்சித்த போது நாய்க்குட்டி மிரண்டதால் அந்த பிஸ்கட்டை நாயின் உரிமையாளரிடம் கொடுத்து அதனை வழங்கும் படி கூறியதாகவும் இதெல்லாம் ஒரு பிரச்சனையா? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

நாட்டில் பொருளாதார அரசியல், கட்சி தாவல் அரசியல், பணவீக்க அரசியல், வேலை வாய்ப்பின்மை அரசியல், இலவசங்கள் அறிவிக்கும் அரசியலை பார்த்த நெட்டிசன்களும், குடிமக்களும் இதென்ன நாயை வச்சு அரசியல்.... என்னடா இந்தியாவுக்கு வந்த சோதனை என புலம்ப ஆரம்பித்துள்ளனர்...

Night
Day