அயோத்தியில் பாஜக அதிர்ச்சி தோல்வி.. 5 காரணங்கள்!

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில், பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியை மட்டுமின்றி, கோயில் நகரத்தை ஒட்டிய பஸ்தி, அம்பேத்கர்நகர், பாரபங்கி போன்ற தொகுதிகளையும் பாஜக இழந்ததற்கான காரணம் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு....

நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்து அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டாலும், கூட்டணி கட்சிகளுடன் 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. 

இந்தநிலையில்தான், அயோத்தியில் ராமர் கோயில் கட்டி, புதிய ராம் லல்லா சிலை கும்பாபிஷேகம் நடந்த நான்கு மாதங்களிலேயே அந்த தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. 

சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் 54 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் லல்லு சிங்கை தோற்கடித்துள்ளது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைத்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என்று அயோத்தியில் முதலில் கூறியவர் பாஜகவின் லல்லு சிங். அயோத்தி வளர்ச்சியடைந்து ராமர் கோவில் கட்டும் பணி நடந்தும், தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பைசாபாத் தொகுதி மக்களிடையே பரவலாக இருந்து வந்தது.

மேலும் அயோத்தி வளர்ச்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கிடைக்காததால் உள்ளூர் மக்களிடையே நிலவிய அதிருப்தியும், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர பாஜக விரும்புகிறது என எழுந்த குற்றச்சாட்டும், பைசாபாத் தொகுதியில் பாஜகவின் தோல்விக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

2014 மற்றும் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட லல்லு சிங் "மோடி அலையில்" சவாரி செய்து வென்றார். ஆனால் சாதி முக்கியப் பிரச்சினையாக மாறியவுடன், இந்த தேர்தலில் லல்லு சிங் தோல்வியை தழுவியுள்ளார் என்ற காரணமும் கூறப்படுகிறது.

கோவில் நகரத்தில் பாஜகவின் அதிர்ச்சி தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இவை அனைத்தும் , சமாஜ்வாடி கட்சிக்கு பிரகாசமாக வெற்றியை தேடி தந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமின்றி வெற்றி பெற்ற வேட்பாளர் அவதேஷ் பிரசாத், பட்டியலினமான பாசி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வெற்றிவாகை சூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அயோத்தியை மட்டும் இழந்தது மட்டுமின்றி, கோவில் நகரத்தை ஒட்டியுள்ள பஸ்தி, அம்பேத்கர்நகர், பாரபங்கி போன்ற தொகுதிகளையும் பாஜக இழந்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Night
Day