திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரட்சணை கொடுமை செய்த கணவர் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகளான கனிஷ்கா என்பவருக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம்சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே பல்ராம்சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது திருமணத்திற்கு பிறகு தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி கனிஷ்கா தனது கணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது, பல்ராம்சிங் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனது கணவரிடமிருந்து பிரிந்து தாய் வீட்டிற்கு கனிஷ்கா சென்றுள்ளார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்காக நெல்லை சென்ற பல்ராம்சிங் குடும்பத்தினர், இருட்டுக்கடையை தங்ளது பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங் மற்றும் அவரது மகள் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.