எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை கொடுங்கையூர்-மணலி சாலையில் எழில் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூன்று ஆண்டுகளாகியும் மேம்பால பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.
சென்னை கொடுங்கையூர்-மணலி சாலையின் குறுக்கே எழில் நகர் பகுதியில் ரயில் பாதை செல்கிறது. இங்கு ரயில் போக்குவரத்திற்காக தினமும் 20 முறைக்கு மேல், வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பல மணி நேரம் வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். அதன் பேரில், எழில் நகர் பகுதியில் எல்.சி-2 என்னும் ரயில்வே கேட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து, கொடுங்கையூர்-மணலி சாலையின் குறுக்கே 106 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், மேம்பால பணிகள் இன்னும் முடிவடையாததால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சாலைகளும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதோடு, அடிக்கடி விபத்துகளை சந்திக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் டாஸ்மாக் கடைகள் அதிகம் இருப்பதால் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களால் பெண்கள் குழந்தைகள் என பலரும் சாலையில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
விளம்பர திமுக அரசு இனியும் தாமதிக்காமல் மேம்பால பணிகளை விரைந்து முடிப்பதோடு, சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்பதே எழில் நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.