பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வு - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான தமிழக அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலையை 30 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை என 40 சதவீத அளவுக்கு உயர்த்தியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். 

“ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனிதனை கடித்த கதையாக” இருக்கிறது திமுக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் என்று புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார்.

ஏற்கனவே சொத்து வரி உயர்வு, ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என பல்வேறு வழிகளில் மக்களிடமிருந்து எப்படியெல்லாம் வசூலிக்க முடியும் என்று திட்டம் போட்டு செயல்படும் திமுக தலைமையிலான அரசு, தற்போது பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி மாணவர்களின் தலையில் கை வைத்திருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன என்றும், 8-ம் வகுப்பு புத்தகம் 40 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையிலும், 9 முதல் 12-ம் வகுப்பு புத்தகங்கள் 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒருசில புத்தகங்கள் 90 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன என்றும், இதன்மூலம் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் ஒன்றாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வாங்க, இதுவரை 390 ரூபாய் செலவான நிலையில், தற்போது உயர்த்தப்பட்ட புதிய விலையின்படி 160 ரூபாய் கூடுதலாக கொடுத்து, 550 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனை தெரிவித்துள்ளார். 

அதேபோன்று, நான்காம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வாங்க, இதுவரை 470 ரூபாய் செலவான நிலையில், தற்போது உயர்த்தப்பட்ட புதிய விலையின்படி 180 ரூபாய் கூடுதலாக கொடுத்து, 650 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது என்றும், அதேபோன்று, ஏழாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வாங்க, இதுவரை 860 ரூபாய் செலவான நிலையில், தற்போது உயர்த்தப்பட்ட புதிய விலையின்படி 340 ரூபாய் கூடுதலாக கொடுத்து, 1,200 ரூபாய்க்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், திமுக தலைமையிலான அரசு, மாணவ மாணவியருக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தாங்கமுடியாத சுமையை ஏற்றி இருக்கிறது என சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” என்ற திருவள்ளுவரின் கூற்று இந்த விளம்பர திமுக அரசுக்கு தெரியாமல் போனது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்று புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார். 

ஏனென்றால் “எங்கும் வசூல், எதிலும் வசூல்” என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்து செயல்படும் திமுகவினருக்கு மாணவர்களைப்பற்றியோ, அவர்களின் பெற்றோர்களை பற்றியோ சிறிதும் கவலை இல்லை என்றும், மேலும், திமுக தலைமையிலான அரசு தமிழ்ப்புதல்வன் என்று ஆசைகாட்டுவது ஏன்? என இப்போது அனைவருக்கும் தெளிவாக புரிகிறது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

திமுகவினரின் இதுபோன்ற செயல்களால் தான் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என அனைவராலும் அறியப்படுகின்றனர் என்றும், 
 
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் தாங்க முடியாத அளவுக்கு பள்ளிக்கட்டண செலவு, சீருடைகள், போக்குவரத்திற்கு ஆகும் செலவை சமாளிப்பது, நீட் தேர்வை எதிர்கொள்வது போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்வி பயின்று வரும் நிலையில் தற்போது திமுக தலைமையிலான அரசு பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தியிருப்பது சாமானிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் செயல் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

எனவே, திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய மனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தீமை செய்யாமல் இருப்பது நல்லது என கேட்டுக்கொள்வதாக சின்னம்மா கூறியுள்ளார். 

எனவே நம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பாடப்புத்தகங்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day