பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 27 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் முதற்கட்டமாக 27 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குவெட்டாவிலிருந்து பெஷாவர் செல்லும் ஜாஃபர் விரைவு ரயிலை குடலார் மற்றும் பிரு குன்ரி மலைகளுக்கு இடையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் வைத்து ஆயுதமேந்திய பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கடந்த 11-ம் தேதி கடத்திச் சென்றனர். அந்த ரயிலில் எத்தனை பணயக்கைதிகள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் குறைந்தது 400 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடத்தப்பட்ட ரயிலை சுற்றி வளைத்த ராணுவத்திற்கும் பலுசிஸ்தான் விடுதலைப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இரவு முழுவதும் நீடித்த சண்டையின் முடிவில் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மாக் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே சில பணயக் கைதிகளை கிளர்ச்சிப் படையினர் மலைப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் 30 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பலுசிஸ்தான் விடுதலைப் படை தெரிவித்துள்ளது. 

Night
Day