டெல்லியில் தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 75வது குடியரசு தின கொண்டாட்டம் உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் புறப்பட்டார். இவருடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வழக்கமாக குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து சொகுசு காரில் பயணிக்கும் குடியரசு தலைவர் இந்த முறை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பயணித்தார். குதிரைப்படை தொடங்கி 250 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து சாரட் வண்டியில் வலம் வந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் குடியரசு தலைவர் ஒருவர் சாரட் வண்டியில் வருவது இதுவே முதன்முறை. இந்நிலையில் குடியரசு தலைவர் மற்றும் பிரான்ஸ் அதிபருக்கு குடியரசு தலைவரின் சிறப்பு பிரிவினர் மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் பட்டொளி வீசும் மூவர்ண கொடி மீதும், சிறப்பு விருந்தினருக்கும், கூடியிருந்த நாட்டு மக்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமான அணிவகுப்பு நடைபெற்றன. இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெண்களின் சக்தியை நாட்டுக்கு தெரியபடுத்தும் விதமாக 100 பெண்கள் பங்கேற்று நாதஸ்வரம், சங்கு, மகுடி உள்ளிட்ட பல்வேறு விதமான வாத்தியங்களை இசைத்தபடி குடியரசு தலைவருக்கு வணக்கம் செலுத்தினர். 

இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் ராணுவ பீரங்கி வாகனங்கள், கனரக ஆயுத வாகனங்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் என மிடுக்காக அணிவகுத்து சென்ற பாதுகாப்புத்துறை வாகனங்கள்.

75வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின், பிரெஞ்ச் படையினர் அணிவகுத்து சென்றனர். 30 பேர் கொண்ட இசைக்குழுவுடன் 90 பேர் அடங்கிய ராணுவ வீரர்கள் மிடுக்காக நடந்து சென்றனர். அப்போது அவர்களின் ராணுவ வலிமையை காட்டும் வகையில் அதிநவீன ராணுவ டாங்கி, 2 ரபேல் போர் விமானங்களின் மாதிரிகள், பிரான்ஸ் விமானப்படை விமானங்களின் ஊர்திகள் சென்றன.

இதனைத்தொடர்ந்து இந்தியாவின் சக்திவாய்ந்த போர் தளவாடங்கள் அணிவகுத்து சென்றன. டி-90 பீஷ்மா ராணுவ டேங்குகள், இலகுரக போர் விமானங்கள், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பினாகா பீரங்கி படைகள், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்டவை நாட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. 

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் பெண்களை போற்றும் வகையில் பல்வேறு பிரிவை சேர்ந்த பெண்கள் குழுவினர் அணிவகுத்தனர். கம்பீர குரலில் முழக்கமிட, அவர்களின் குழுக்கள் கண்களை கவரும் வகையில் மிடுக்காக அணிவகுத்து சென்றனர். இதனை பார்த்த நாட்டு மக்கள் குரல் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மத்திய அமைச்சர்கள் பலரும் பெண்களுக்கு மரியாதை செய்யும் வகையில் எழுந்து நின்றும், கைகளை தட்டியும் பெண் படையினரை உற்சாகப்படுத்தினர். கேப்டன்கள் சந்தியா, சரண்யா ராவ், அனுஷ்யா யாதவ், சிரிஷ்டி ராவ், அம்பா சமந்த், காஞ்சனா, திவ்ய ப்ரியா, மேஜர் சிரிஷ்ட் குல்லர் ஆகியோரின் படைகள் கம்பீர நடை போட்டு இந்திய மக்களுக்கும், ராணுவத்துக்கும் புதிய உத்வேகத்தை அளித்தனர். தொடர்ந்து மெட்ராஸ் ரெஜிமென்ட், ராஜ்புதானா ரைபிள்ஸ், சிக் ரெஜிமென்ட் மற்றும் குமான் ரெஜிமென்ட்டும் அணிவகுத்து சென்றனர்.  

தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சார பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையிலான அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்று அந்தந்த மாநில மக்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தன. தமிழ்நாடு, குஜராத், அரிணாச்சல் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, லடாக் உள்ளிட்டவைகளின் வாகனங்களுடன் அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனங்களை ஆடியவாறு அணிவகுப்பு சென்றது.  

நாட்டில் உள்ள முக்கிய துறைகள் படைத்த சாதனையின் அடையாளமாக அந்தந்த சாதனைகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக சந்திரயான்-3, சாகர்மாலா, உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு அலங்கார ஊர்தி, ஜி-20 உச்சி மாநாட்டின் வெற்றி, தேர்தல் ஆணையத்தின் வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

பின்னர் வந்தே பாரத் 3.0 திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரத்து 500 பெண் நடன கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். வந்தே பாரதம் தலைப்பில், குச்சிபிடி, பரதநாட்டியம் உள்ளிட்ட 30 வகையான நடனங்களை திறம்பட ஆடினர். பழங்குடி, நாட்டுப்புறம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஒரே இடத்தில் ஆயிரத்து 500 பெண்கள் நடனமாடி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். நாட்டில் உள்ள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. 

மீண்டும் ஒருமுறை பெண்களின் சக்தியையும், திறமையையும் பறைசாற்றும் வகையில் 260 பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகனங்களின் சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன. பிரமிப்பூட்டும் வகையில் நடந்த சாகசங்களை கடமை பாதையில் கூடியிருந்த மக்கள் கண்டுகளித்தனர். 

இறுதியாக கடமை பாதையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொடாந்து அனைவரின் கண்களும் வானை நோக்கின. அங்கு இந்தியாவிற்கு சொந்தமான விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்திய விமான படைக்கு சொந்த விமானங்கள், தேஜாஸ், ரஃபேல், சுகோய் 30, மிக் 29 ரக போர் விமானங்கள், ஜாகுவார், டக்கோடா, டோர்னியர் ரக விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. 
மேலும் அபாச்சி ரக ஹெலிகாப்டர்களும் வானில் சாசகங்களை நிகழ்த்தின.

Night
Day