"இந்தியா - ஜோர்டான் 75 வருட நட்பு” - பிரதமர் மோடி பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கான அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதல் கட்டமாக ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக, காலை 8.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த பிரதமரின் பயணம், காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இப்பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்னு அல் ஹுசைன் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு சென்றார். ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் ஜாஃபர் ஹசன் உற்சாகமாக வரவேற்றார். மேலும் ஜோர்டான் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர விடுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய வம்சாவழியினர் பாரத் மாதா கி ஜே போன்ற முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் இந்தியாவின் பாரம்பரிய கலைகளான பரத நாட்டியம் மற்றும் கதக் நடனங்களை வெளிப்படுத்தி பிரதமர் மோடியை இந்திய வம்சாவழியினர் வரவேற்றனர்.

அதனைதொடர்ந்து அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இருநாடுகளுக்கும் இடையே இருப்பது 75 ஆண்டுகால நட்பு என்றும், இது ஒரு வரலாற்று மைல்கல் என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பு புதிய ஊக்கம் அளிப்பதுடன், நம்முடைய உறவில் நீண்டதொரு ஆழத்தை ஏற்படுத்தும் என்றார். வர்த்தகம், டிஜிட்டல் தொழில் நுட்பம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்த பிரதமர் மோடி, 8 அம்ச தொலைநோக்கு பார்வையையும் பகிர்ந்து கொண்டார். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்டான் கொண்டுள்ள தெளிவான நிலைப்பாட்டையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

ஜோர்டான் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி இன்று எத்தியோப்பியா செல்கிறார். எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியை சந்திக்கும் பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாட உள்ளார். தமது பயணத்தின் கடைசி கட்டமாக ஓமன் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் ஹைதம் பின் தாரிக்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.


Night
Day