திமுக நிர்வாகியின் கட்டுப்பாட்டில் பொம்மிடி பணிமனை... லஞ்சம் கேட்டு அட்டூழியம் என புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒப்பந்த தொழிலாளர்களிடம் 25 ஆயிரம் ரூபாய்  பணம் பெற்றுக் கொண்டு வேலை வழங்கிய பொம்மிடி போக்குவரத்து பணிமனையின் கண்ட்ரோலராக பணிபுரியும் திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளைச் செயலாளர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளது. மாத விடுப்பிற்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பது, ஓட்டுநர், நடத்துனருக்கு பணி வழங்குவது என பொம்மிடி போக்குவரத்து பணிமனை கிளையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு திமுக நிர்வாகி செய்து வரும் அட்டூழியத்தை விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... 

தருமபுரி மண்டலத்திற்கு உட்பட்ட பொம்மிடி போக்குவரத்து பணிமனையில் கண்ட்ரோலராக பணிபுவர் G.மாது. திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளைச் செயலாளராக பதவி வகித்து வரும் இவர், பொம்மிடி போக்குவரத்து பணிமனையின் முழுக்கட்டுப்பாட்டையும் தனது கையில் வைத்துக் கொண்டு அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. 

சுமார் 40 ஒப்பந்த தொழிலாளர்களிடம் தலா 25,000 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வழங்கிய திமுக நிர்வாகி மாது, அந்த ஒப்பந்த தொழிலாளர்களிடம் தினந்தோறும் வேலைக்கு செல்ல 200 ரூபாய் கமிஷன் பெற்றுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. 

நகரப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும், ரூட் பஸ்ஸின் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலித்து நன்றாக கல்லா கட்டுவதாக திமுக நிர்வாகி மாது மீது அதே பணிமனையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களும் அரசு நிரந்தர ஊழியர்களும் புலம்புகின்றனர்.

கண்ட்ரோலராக மட்டுமே பணிபுரியும் மாது, தன்னை கிளை மேலாளராக நினைத்துக் கொண்டு நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு பணி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தினந்தோறும் வேறுவேறு வழியில் பணி வழங்கி வரும் மாது, ஒரு சில பகுதிகளுக்கு பேருந்துகளே விடாமல் பொதுமக்களை கடும் இன்னல்களுக்கும் ஆளாக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

இதுமட்டுமின்றி நிரந்தர பணியாளர்கள் மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு கேட்டால், அவர்களுக்கு விடுப்பு அளிக்காமல், மேல் அதிகாரிகளை அனுசரிக்க வேண்டும் எனவும், அப்படி அனுசரித்தால் மட்டுமே தொடர்ந்து தங்களுடன் பயணிக்க முடியும் எனவும் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் மாது. அதற்கு நீ தயாராக இருந்தால் தான் கேட்ட தொகையை செலுத்த வேண்டும் என பகிரங்கமாக பணம் கேட்டு மிரட்டும் திமுக நிர்வாகியின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக ஒரு மாதம் விடுப்பு கேட்டதாகவும், அதற்காக 3000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் திமுக நிர்வாகி மாதுவின் தொந்தரவால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் சௌந்தரராஜன் கூறினார். தனக்கு பணிமணையில் காவலராக பணியை மாற்றி கொடுக்க முறையிட்டபோது பெரும் தொகையை திமுக நிர்வாகி கேட்பதாக கூறிய ஓட்டுநர், ஓய்வின்றி பணி சுமையை ஏற்றி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் புகார் தெரிவித்தார்.

இவ்வாறான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு ஆளான திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கிளை செயலாளர், மாது மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day