துரோகத்திற்கான நோபல் பரிசு இபிஎஸ்-க்கு தான் கொடுக்க வேண்டும்' - செங்கோட்டையன்

எழுத்தின் அளவு: அ+ அ-

கட்சியில் இருந்து தன்னை நீக்கி எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரத்துடன் செயல்படுவதாக அஇஅதிமுக முன்னாள் அமைச்சரும், கழக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், கட்சி உடையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகம் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றும், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் செங்கோட்டையன் கூறினார். 

அம்மா மறைவுக்கு பின்னர் கட்சியை வழிநடத்துவது குறித்து கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அனைவரிடமும் கலந்தாலோசித்தார் என மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், திமுகவின் 'பி' டீமாக தான் செயல்படவில்லை என்றும், 'ஏ1' டீமில் தான் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மூத்த நிர்வாகியான தன்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள செங்கோட்டையன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதிகளை மாற்றியவர் இபிஎஸ் என்றும், கட்சியில் இருந்து தன்னை நீக்கி எடப்பாடி பழனிசாமி சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சிக்கு துரோகம் செய்தது யார்? என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும், துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கலாம் என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தார்.

கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்காக வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ள செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் தான் என்றும், அவரை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை' என்றும் குறிப்பிட்டார்.


varient
Night
Day