தீபாவளி பண்டிகை : இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை அசைவப் பிரியர்கள் வாங்கி சென்றனர். 

நெல்லை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இறைச்சி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று இறைச்சியை வாங்கி சென்றனர். ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ஆயிரம் ரூபாய்க்கும் நாட்டுக்கோழி ஒரு கிலோ ஆயிரத்து 400 ரூபாய்க்கும், லெக்கான் கோழி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள இறைச்சி கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஆட்டு இறைச்சி 800 ரூபாய்க்கும், கோழி இறைச்சி 240 ரூபாய்க்கும் கடல் மீன்களான மத்தி, சங்கரா, கடம்பா, சுறா, இறால், வஞ்சிரம் போன்ற மீன்களின் தரத்திற்கு ஏற்றவாறு ஒரு கிலோ 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. தீபாவளி என்பதால் காலை முதலே திரளான பொதுமக்கள் வருகை தந்து விலையையும் பொருட்படுத்தாமல் இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் தீபாவளி தினத்தை முன்னிட்டு ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளின் விற்பனையானது களைகட்டியது.  ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றனர். ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 900 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும் விற்பனையானது.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் விடியற்காலை 3 மணி முதலே ஏராளமான இறைச்சி பிரியர்கள் குவிந்தனர். கடந்த வாரம் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி இன்று 900 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நாட்டுக்கோழி கோழி இறைச்சி கிலோ 600 ரூபாய் முதல் 700 ரூபாய்க்கு விற்பனையானது.

தூத்துக்குடியில் உள்ள வஉசி மார்க்கெட் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதலே இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளியை முன்னிட்டு கோழி இறைச்சி கிலோ 250 ருபாய்க்கும் நாட்டுக்கோழி உயிருடன் கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல், நாட்டுக்கோழி இறைச்சி கிலோ ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ருபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை என்பதால் விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் இறைச்சியை வாங்கி சென்றனர்.

Night
Day