திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை...

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல்  இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அகஸ்தியர்பட்டி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை மற்றும் தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழை காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், மேலப்பிடாகை, மீனம்பநல்லூர், கருங்கண்ணி, பரவை, ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையல், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறுவை அறுவடைப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் இரவு முழுவதும் தொடர் சாரல் மழை பெய்தநிலையில் காலையில் கடும் பனிமூட்டமும் கடுங்குளிரும் நிலவியது. கடும் பனி மூட்டத்தால் மலைச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்கினர். கடும் பனியால் காலையில் நடைபயிற்சி செல்வோர் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கடும் சிரமமடைந்தனர்.

தூத்துக்குடியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்தது. தூத்துக்குடியில் 4 புள்ளி இரண்டு 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி மற்றும் நகரை ஒட்டியுள்ள கோரம்பள்ளம் காலங்கரை, தருவைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இரவு முதல் இடி மின்னலுடன் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் தாழ்வான பகுதிகளான தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதி, பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, எஸ் எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதி தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 87 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 15 புள்ளி 4 சென்டி மீட்டரும், திருச்செந்தூரில் 14 புள்ளி 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 4 புள்ளி 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் விடியவிடிய கனமழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். விடிய விடிய பெய்த மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கனமழை பட்டாசு கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. சூரங்கோட்டை, பழங்குளம், பட்டினம்காத்தான், பாரதி நகர், வாலாந்தரவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாரதி நகர், புதிய பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.


Night
Day