தமிழகம், புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் கனமழை : ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டத்தில் பெய்து மழை காரணமாக பத்து தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் வயலில் சாய்ந்து மழை நீரில் மூழ்கியது.  கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டமங்கலம், தேவூர், இராதா மங்கலம், இலுப்பூர், சாட்டியக்குடி, கோயில்கண்ணபூர், ஆந்தகுடி ஆதமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரத்து 500 ஏக்கர் முற்றிய நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. ஒரு ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்த நிலையில் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் துவங்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.


இதே போல், திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எக்கல், குன்னலூர், கருவேப்பஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் நீரில் சாய்ந்தது. 700 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்க துவங்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் 150 ஏக்கரில் நெல் பயிர்கள் மழை நேரில் மூழ்கி சேதமடைந்தது. கும்பகோணம் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையால் வலையப்பேட்டை, பேட்டை ஆலை, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள தேப்பெருமா நல்லூர் உள்ளூர் வாய்க்காலை தூர்வாராமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ளன. ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து பாடுபட்டு விளைவித்த குறுவை நெல்மணிகள் மழையால் கண்முன் அழிவதை கண்ட விவசாயிகள், பாசன வாய்க்காலை தூர்வாராததே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அரசு உரிய நிவாரணம் வழங்கி பாதுகாக்க முன்வராவிட்டால் உயிரை மாய்த்துகொள்வதை தவிர வேறுவழியில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காரைக்காலில் தொடர் மழை காரணமாக 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் முறையாக பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாராததால் வயல்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயிர்கள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க்கால் மற்றும் வடிநீர் வாய்க்காலை தூர்வார மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாராததால் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்பு புதுச்சேரி அரசு வடிகால் வாய்க்காலை தூர் வாராததால் வயல்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் வகையில் பெரிய அளவில் வடிகால் அமைக்காததால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். மழைக்கு முன்பு வடிகால் வாய்க்காலை தூர் வார வேண்டுமென பலமுறை முறையிட்டும் அரசு செவிசாய்க்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. குறிப்பாக வெண்மணி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கிடங்கிற்கு எடுத்து செல்லாததால் நெல் மணிகள் முளைத்து சாக்கிற்கு வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் நெல் மூட்டைகளை வெளியிலேயே விவசாயிகள் அடுக்கி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையில் மூட்டைகள் நனைந்து நெல் முளைக்க துவங்கி உள்ளது. இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து தற்பொழுது அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் போட முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

varient
Night
Day