தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 39 மையங்களில் நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் 38 ஆயிரத்து 500 பேரும், பாதுகாப்பு பணியில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும் ஈடுபடுகின்றனர்.

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் பணிகளில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுகின்றனர். 

இந்த மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. ஒவ்வொரு அறையிலும் 14 மேசைகளில் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு மேசையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்பட்டு, ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். 

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரம் போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரும், 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 

Night
Day