டெல்லி கார் வெடிப்பு : தமிழக-கர்நாடக மாநில எல்லையில் சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் பல்வேறு முக்கிய இடங்களில் சோதனைகளும் நடைபெற்று வருவதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அதிக வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டும், சந்தேகப்படும்படி கைப்பைகளை கொண்டு சென்ற நபர்களை பிடித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவு 12 மணி முதல், மறு அறிவிப்பு வரும் வரை 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவிகளுடன், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதைப்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, பணி நேரங்கள் 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.

இதேபோல், தூத்துக்குடி விமான நிலையத்தில் கூடுதலாக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் மற்றும் அவரது உடைமைகள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். விமான பயணிகளுடன் வரும் பார்வையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பேரில், தமிழக, கேரள எல்லைப் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள 16 இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல், ரயில் நிலைய நடைமேடையில் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உள்ள குப்பைத்தொட்டி மற்றும் ரயில் பயணிகளின் உடமைகள் ஆகியவற்றை போலீசார்  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளை மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. அதுப்போல், கேட்பாரற்ற நிலையில் ஏதேனும் மர்ம பொருட்கள் தென்பட்டால் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பயணிகளுக்கு அறிவுத்தப்பட்டது 

Night
Day