சென்னை அருகே வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது - வானிலை ஆய்வு மையம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அருகே நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிட்வா புயலாக மாறியது. டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரே இடத்தில், பல மணி நேரமாக நிலை கொண்டிருந்ததால் சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் இருந்து 150 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 130 கிலோ மீட்டர், நெல்லூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day