ஏரியை ஆக்கிரமித்து கட்டப்படும் மேம்பாலம் - மக்கள் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் ஏரியை ஆக்கிரமித்து 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மேம்பாலத்தின் கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊனமாஞ்சேரி ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊனமாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட 116 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரி கரையோரம் வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாத நிலையில், அப்பகுதியில் மின்கம்பங்கள் நடப்பட்டு அவற்றுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அரசின் எந்த துறை சார்பில் கட்டுமானம் நடக்கிறது என ஊராட்சி நிர்வாகத்திற்கு சந்தேகம் எழ, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் விசாரித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

 இந்நிலையில் பெரிய ஏரிக்கு அப்பால் உள்ள 300 ஏக்கர் விவசாய நிலத்தில் பல ஆயிரம் வீடுகளுடன் புதிய குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து, சினிமா தயாரிப்பாளர் ஒருவர் மேற்கொள்கிறார் எனவும், அந்த குடியிருப்பு பகுதிக்குள் கனரக வாகனங்கள் சென்று வரவே மேம்பாலம் கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படும் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day