உரிமைத் தொகை எங்கே... அமைச்சரை முற்றுகையிட்டு வசைபாடிய பெண்கள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கேட்டதற்கு அலட்சியமாக பதிலளித்து சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பெண்கள் வசைபாடி தீர்த்தனர். வாக்காளர்களை மதிக்காத திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என பெண்கள் வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

வாக்குச் சேகரிக்க காரில் ஜம்பமாக வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்ட பெண்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பிய காட்சிகள் தான் இது.

மக்களவைத் தேர்தல் தேதி நெருங்க நெருங்க ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக வாக்காளர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. ஈரோட்டில் மகளிர் உரிமை தொகை கேட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையே திணற வைத்தார் பெண் ஒருவர். அடுத்ததாக திருவள்ளூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ-வை அப்பகுதி மக்கள் வறுத்தெடுத்த சம்பவமும் ஆளுங் கட்சியினரை அதிரவைத்தது.

இது போன்ற சம்பவங்களால் ஆடிப்போயிருக்கும் திமுகவினரில் தலையில் அடுத்த அடியை இறக்கியுள்ளனர் நெல்லை மாவட்ட மக்கள். அந்த மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். 

சேரன்மகாதேவி அருகே முக்கூடல் பேரூராட்சி பகுதியில் தேர்தல் நடத்தி விதிகளை மீறி ஆதரவாளர்களின் வாகனங்கள் புடைசூழ வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. பகட்டாக வந்து கொண்டிருந்த அமைச்சரிடன் காரை, சட்டென வழிமறித்தனர் அப்பகுதி பெண்கள். இதனால் அமைச்சர் திகைத்துப் போக, அப்போது ஆவேசமடைந்த பெண்கள் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் தருவதாக ஓட்டு வாங்கீனீர்களே, எங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்று கேள்வி எழுப்பினர். தேர்தல் முடிந்ததும் கிடைக்கும் என காரில் இருந்படியே அமைச்சர் மழுப்பலாக கூற, எப்போது உரிமைத் தொகை கிடைக்கும் என இப்போதே கூறிவிட்டுச் செல்லுமாறு ஆவேசப்பட்டனர் பெண்கள். 

எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வண்டியை கிளப்பிய அமைச்சரிடம், குடிநீர் சரியாக வருவதில்லை என்றும் பெண்கள் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், போய் பஞ்சாயத்து அலுவலகத்தில் கேளுங்கள் என்று கூறிவிட்டு, விட்டால் போதும் என்று காரில் தப்பித்து ஓடினார். 

தங்களுடையே கோரிக்கைகளுக்கு சரிவர பதிலளிக்காமல் அமைச்சர் சென்றதால் ஆத்திரமடைந்த பெண்கள், இனி ஓட்டு கேட்டு இந்த பக்கம் வந்து விடாதீர்கள் என்று கொந்தளிப்புடன் கூறினர். உரிமைத் தொகை கிடைத்தால்தான் ஓட்டுப் போட வருவோம் என்றும் கூறிவிட்டு கோபத்துடன் கலைந்து சென்றனர். 

பெண்களின் கோரிக்கைக்கு சரிவர பதிலளிக்காமல் தப்பியோடிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றன. இதனால், ஆடிப் போயிருக்கிறது ஆளுங் கட்சி வட்டாரம். 

Night
Day