எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் மூன்றாவது மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விரிவாக விசாரித்து அறிக்கை வழங்க மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன் பேரில் நேற்று முன் தினம் தனது விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், கோயில் பாதுகாவலர்கள் பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து கோயில் அறநிலையத்துறை அலுவலர் பெரியசாமி, தனிப்படையினர் அஜித்தை தாக்கிய சம்பவத்தை வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், கோயில் அலுவலர் பிரபு, கோயில் உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக், அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், திருப்புவனம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்.