விண்ணில் பாய்ந்தது 'பாகுபலி' ராக்கெட்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 தகவல் தொடர்பு செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்டா​வில் இருந்து பாகுபலி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நாட்​டில் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனமான இஸ்ரோ இது​வரை 48 செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்​தி​யுள்​ளது. அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்​தப்​பட்ட ஜிசாட்-7 செயற்​கைக்​கோளின் ஆயுட்​காலம் விரை​வில் முடிவடைய உள்​ளது. அதற்கு மாற்றாக, ஆயிரத்து 600 கோடி​ ரூபாய் மதிப்பில் அதிநவீன சிஎம்​எஸ்​-03 ஜி​சாட்​-7ஆர் செயற்​கைக்​கோளை இஸ்ரோ வடிவமைத்தது. ​

4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட இந்த சிஎம்​எஸ்​-03 செயற்கைக்கோள் இது​வரை புவிவட்ட சுற்​றுப் ​பாதைக்கு ஏவப்​பட்​ட​திலேயே அதிக எடை கொண்டதாகும். ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து  பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படும் எல்​விஎம்-3 ஜிஎஸ்​எல்வி மார்க்​-3 ராக்​கெட் மூலம் இந்த செயற்கைக்கோளை திட்டமிட்டபடி நேற்று மாலை 5.26 மணி அளவில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சிஎம்​எஸ்​-03 தகவல் தொடர்பு செயற்​கைக்​கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்றும் இந்தத் திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்.  சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு தகவல் தொடர்பு சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த செயற்கைக்கோள் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது என்று கூறிய அவர், நாட்டின் தகவல் தொடர்பு திறனுக்கான இந்த முக்கியமான செயற்கைக்கோளை உருவாக்கியதற்காக இஸ்ரோவின் பல்வேறு மையங்களை சேர்ந்த குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், கடற்படை தகவல் தொடர்பு மற்றும் கடலோர பாதுகாப்புக்கு இது ஊக்கம் அளிக்கும் என்று தெரிவித்தார். இந்திய கடற்படைக்காகவும், அதற்கு தேவையான கருவிகளுடன் உருவாக்கப்பட்ட அதிநவீன செயற்கைக்கோள் இது என்று குறிப்பிட்ட நாராயணன், அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் என்பதால், எல்விஎம் 3- எம்5 ராக்கெட் பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படுவதாக கூறினார்.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சம் 29 ஆயிரத்து 970 கிலோ மீட்டர் தூரம் கொண்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோளில் விரிவுபடுத்​தப்​பட்ட மல்டி பேண்ட் தொழில்​நுட்ப வசதி​கள் உட்பட பல்​வேறு நவீன அம்சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்​திய கடற்​படை மற்​றும் ராணுவத்​தின் பணி​களுக்​காக இந்த செயற்​கைக்​கோள் பயன்​படுத்​தப்பட உள்​ளது. கடலோர எல்​லைகளை கண்​காணிப்​பதுடன், போர்க் கப்​பல்​கள், விமானங்​கள் இடையே பாது​காப்​பான தொலைத் தொடர்பு சேவையை மேம்​படுத்​தி​யும் வழங்கும். ஒட்​டுமொத்​தத்தில் இந்​தி​யா​வின் கடல்​சார் பாது​காப்பை அதி​கரிப்​பதே இதன் முக்​கிய நோக்​கம் ஆகும்.

இதனிடையே, சிம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நமது விண்வெளித் துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது என்றும் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சிம்எஸ்-03 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் நமது விண்வெளித் துறை, எவ்வாறு சிறப்பிற்கும் புதுமைக்கும் ஒத்ததாக மாறியுள்ளது என்பது பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Night
Day