பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு - மேலும் 3 மருத்துவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் வெடிப்பு விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அல்-ஃபலா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட மேலும் மூன்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தீவிமடைந்துள்ளது. இந்தியாவின் முதன்மையான பயங்கரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமையிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் பரிதாபாத்தில் நேற்று 2 ஆயிரத்து 900 கிலோ வெடிபொருட்கள் சிக்கியதற்கும் கார் வெடிப்புக்கும் தொடர்பா என்று தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் ஒருகட்டமாக அங்குள்ள அல் ஃபலா பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்த மேலும் 3 மருத்துவர்கள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அங்கு இன்று சென்ற டெல்லி காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், ஃபரிதாபாத் வெடிபொருட்கள் கடத்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கார் வெடிப்பு தொடர்பான விசாரணையின் போது ​​விவாதிக்கப்பட்ட மூன்று மருத்துவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணயை தொடர்ந்து மருத்துவர்கள் முசம்மில் ஷகீல், உமர் முகமது மற்றும் ஷாஹீன் ஷாஹித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் முசம்மில் மற்றும் உமர் ஆகிய இருவரும் காஷ்மீரையும், பெண் மருத்துவரான ஷாஹீன் லக்னோவையும் சேர்ந்தவர்கள் ஆவர். மூவரும் ஃபரிதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர். 

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசார் தலைமையிலான ஜமாத் உல்- மோமினா அமைப்பின் இந்தியக் கிளைக்கான பொறுப்பு மருத்துவர் ஷாஹீன் ஷாஹித்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததும், அந்த அமைப்பிற்காக அவர் ஆள் சேர்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Night
Day