டெல்லி கார் குண்டு வெடிப்பு : NIA, NSG அதிகாரிகள் ஆய்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் வெடிப்பு சம்பவ விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. அதேநேரம் என்எஸ்ஜி அமைப்பும் விசாரணை மேற்கொண்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணிக்கு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில், உள்துறைச் செயலாளர் கோவிந்த்மோகன், தேசிய புலனாய்வு முகமை தலைவர் சதானந்த் வசந்த், டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் சதீஷ் கோல்சா, ஜம்மு & காஷ்மீர் டிஜிபி நளின் பிரபாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்பு படையினரும் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். 

கார் வெடிப்பு சம்பவ விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லி கர்தவ்யா பவனில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், பாதுகாப்பு தொடர்பான அடுத்தகட்ட ஆய்வுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

Night
Day