டெல்லி கார் குண்டுவெடிப்பு - சதிகாரர்கள் யாரும் தப்ப முடியாது - பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்ப முடியாது என்றும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு திம்பு விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார்.

பின்னர் அங்கு நடைபெற்ற அமைதி பிரார்த்தனை விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சி மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவில் இந்தியாவும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும், உலகெங்கிலும் உள்ள துறவிகள் உலக அமைதிக்காக ஒன்றிணைந்து செய்யும் இந்த பிரார்த்தனையில், 1 புள்ளி 4 பில்லியன் இந்தியர்களின் பிரார்த்தனைகளும் அடங்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை தான் புரிந்துகொள்வதாகவும், முழு நாடும் அவர்களுடன் நிற்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை விசாரித்து வரும் அனைத்து நிறுவனங்களுடனும் தான் தொடர்பில் இருப்பதாகவும், இந்த சதித்திட்டத்தின் பின்னணி கண்டுப்பிடிக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

Night
Day