மேட்டூரில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை - குடிமராமத்துப் பணிகளால் தண்ணீர் வருவதைத் தடுக்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தல்
Aug 14 2019 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேட்டூரில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே காவிரி மற்றும் அதன் 35 கிளை ஆறுகளில் தண்ணீர் தட்டுப்பாடின்றி செல்லும் என தெரிவித்துள்ள விவசாயிகள், குடிமராமத்து பணிகளை காரணம் காட்டி, தண்ணீர் வருவதைத் தடுக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக, 3 லட்சம் கனஅடி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணை 100 அடியை எட்டிய நிலையில், டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கட்டத்தில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் மேட்டூர் அணை நிரம்பும் நிலை உள்ளது.
மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில், உபரிநீர் கொள்ளிடம் வழியே கடலில் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், வாய்க்கால்களில் குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தண்ணீர் வருவதன் காரணமாக, இந்த பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக, அரசு சார்பில், பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே காவிரி மற்றும் அதன் 35 கிளை ஆறுகளில் தண்ணீர் தட்டுப்பாடின்றி செல்லும் என்றும், இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள குளங்கள், ஏரிகளில் தண்ணீரை சேகரிக்க முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் போதுமானதாக இருக்காது என்பதால், குடிமராமத்து பணிகளை காரணம் காட்டி தண்ணீர் செல்வதை தடுக்கக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.