இரவில் நடுத்தெருவில் பிறந்த நாள் கொண்டாட்டம் : சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேர் கைது
Oct 3 2022 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை நகரில் சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய விற்பனை பிரதிநிதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வெரைட்டி ஹால்ரோடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது.
அந்த வீடியோவில், நள்ளிரவில் 6 இளைஞர்கள் ஒன்று கூடி நடுரோட்டில் நின்று கொண்டு பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்துள்ளன.
இடையர் வீதியில் சம்பவம் நடந்ததை உறுதி செய்த காவலர், இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். பின்னர், ரோந்து வாகனத்தில் மேலும் சில காவலர்களுடன் இடையர் வீதி பகுதிக்கு சென்றார். அப்போது விசாரித்ததில், அந்த வீடியோவானது கடந்த மாதம் 25-ம் தேதி எடுக்கப்பட்டது என தெரியவந்தது.
இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில், செல்வபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் அசோக்குமார் என்பவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து செல்வபுரத்தை சேர்ந்த அசோக்குமாரை கைது செய்த போலீசார், அவரது நண்பர்களான ஆட்டோ ஓட்டுனர் அரவிந்தகுமார், தினேஷ்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோரை கைது செய்தனர்.
இதில், அசோக்குமார், தினேஷ்குமார், பார்த்திபன் ஆகியோர் மீது அடி தடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும்,வழக்கில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.