கம்பம் அருகே ஊராட்சி நிதியிலிருந்து உறவினர்களுக்காக 2 லட்சம் ரூபாயை செலவு செய்த திமுக ஊராட்சி தலைவர் - உரிய நடவடிக்கை எடுக்குமாறு வார்டு உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
Jun 28 2022 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் சுருளிபட்டி ஊராட்சியில், திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி நிதியிலிருந்து அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காக 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக புகார் தெரிவித்து, 11 வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுருளிப்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த நாகமணியும், துணை தலைவராக ஜெயந்தி மாலாவும் உள்ளனர். மேலும் அங்கு அக்கட்சியை சேர்ந்த 11 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர். சுருளிப்பட்டி ஊராட்சியின் 11 வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி மன்ற தலைவருக்கும், துணை தலைவருக்கும் எதிராக, தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் புகார் மனு அளித்தனர். அதில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஊராட்சி நிதியிலிருந்து 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய், மாவட்ட அதிகாரிகள், அவரது உறவினர்கள், வருவாய் துறையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக காவலர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு செலவு செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, உரிய ஆய்வு நடத்தி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது 15 நாட்களுக்குள் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.