மத்திய கல்விக் கட்டண நிர்ணயக்குழு, நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதலாக கட்டடணம் வசூலிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு
May 21 2022 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் கல்விக் கட்டண நிர்ணயக்குழு, நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதலாக கட்டடணம் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் மருத்துவ கல்லூரிகள் capitation கட்டணம் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடை செய்யும் வகையில் கல்வி கட்டணங்களை ரொக்கமாக வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மாநில அரசின் கல்வி கட்டண நிர்ணயக்குழு, நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே தனியார் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். கல்லூரி நிர்வாகங்கள் தன்னிச்சையாக கல்விக் கட்டணங்களை உயர்த்த அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். கூடுதல் கட்டண வசூலை தடுக்க, பிரத்யேகமாக இணையதள பக்கம் ஒன்றை உருவாக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதில் தனியார் கல்லூரி கட்டண விவரங்களை பதிவேற்ற வேண்டும் என ஆணையிட்டனர். மாணவர்கள் கூடுதல் கட்டண புகார்களை அந்த இணையதளம் வாயிலாக தெரிவிக்கவும் வழிவகை செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் இந்த இணையதளம் தொடர்பாக மாணவர் சேர்க்கை காலங்களில் பத்திரிகை வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.