மார்ச் 15ம் தேதி முதல் நேரடி வழக்கு விசாரணை: வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
Mar 8 2021 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்றத்தில், வரும் 15-ம் தேதி முதல், காணொலி மூலம் நடைபெறும் விசாரணையுடன், நேரடியாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, உச்சநீதிமன்றத்தில், கடந்த ஆண்டு மார்ச் இறுதியிலிருந்து, நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது. Video Conference வழியாகவே, வழக்குகளை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை தொடங்கப்பட வேண்டும் என, வழக்கறிஞர் சங்கங்கள் வலியுறுத்தின. இதனையடுத்து, வரும் 15-ம் தேதிமுதல், வாரத்தில் 3 நாட்களில் மட்டும், உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பட்டியலிடப்படும் வழக்குகளின் விசாரணை, வழக்கம்போல் காணொலி வாயிலாகவே நடைபெறும். மற்ற 3 நாட்களில் பட்டியலிடப்படும் வழக்குகளின் விசாரணை, நீதிபதிகளின் விருப்பத்துக்கேற்ப, காணொலி வாயிலாகவோ, நேரடியாகவோ நடைபெறும்.
நேரடி வழக்கு விசாரணை நடைபெறும்போது, நீதிமன்ற அறைக்குள் 20 நபர்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. அந்த விதிமுறை மீறப்பட்டால், வழக்கு விசாரணை காணொலி வாயிலாகவே நடைபெறும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.